திங்கள், 12 மார்ச், 2012

13 நவம்பர்அந்த 10ஆம் வகுப்புல இருக்க 40 மாணவர்களோட சலசலப்பான பேச்சயும்த் தாண்டி கணக்கு வாத்தியாரோட குரல் கணீர்னு கேட்டுட்டு இருந்தது.

“சிவா” “பிரசண்ட் சார்”
“திருமால்” “பிரசண்ட் சார்”
“விஸ்வா” “பிரசண்ட் சார்”
“13 நவம்பர்” “பிரசண்ட் சார்”

“ஏண்டா 13 உன்ன நேத்து சாயந்தரம் என் ரூமுக்கு வந்து பாக்க சொன்னேனே ஏண்டா வரல?”

”அது வந்துங்க சார் நேத்து எங்கப்பா ஏதோ பிரச்சனை பண்ணாருனு போலீஸ் புடிச்சி ஸ்டேசன்ல வச்சி இருக்கரதா வீட்ல இருந்து வந்து என்ன கூட்டிட்டுப் போய்ட்டாங்க சார் அதான் வர முடியல இன்னைக்கு பிரேக்ல உங்க ரூம்க்கு வரேன் சார்” 13

“உனக்கு 13 நவம்பர்னு உன் அப்பன் பேர் வச்சிருக்கப்பவே தெரிஞ்சிது அந்த ஆள் கோக்குமாக்குனு” வாத்தியார் சொன்னதும் வகுப்புல இருக்க 39 பேரும் சிரிச்சது 13க்கு வேதனையா இருந்தது. 5’ 2” இருந்த அவன் உயரம் தலைய குனிஞ்சி 5’ 1” ஆயிடிச்சி.

13 என்ன நினச்சானோ இத்தண நாளா யாரையும் எதிர்த்துப் பேசாதவன் “சார் போதும் அவர வையாதீங்க அவர் பெரிய அறிவாளி அப்படி பேர் வச்சார்னா அதுக்கு பின்னாடி எதுவோ காரணம் இருக்கும், உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்”னு வேகமா சொல்ல

”ஆமாடா குருவி மலைல உச்சி வெயில்ல ஏறி நின்னுக்கிட்டு வடமேற்க்குல 32 நட்சத்திரம் தெரியுதுனு ஊர்ல இருக்கிரவன்லா கேனைனு நெனச்சி சொன்னார் பாரு உங்க அப்பாரு அவரு அறிவாளி தான் நாங்கலா தான் முட்டாபயங்க”னு வாத்தியார் திருட்டு கேஸ்ல மாட்டுன பிக்பாக்கெட் ஜட்ஜ் முன்னாடி தலைய குனிஞ்சி கைகட்டி நிக்கிற மாதிரி நின்னு சொல்ல அத பாத்து மத்த 39 பேரும் முன்ன விட இன்னமும் வேகமா சிரிக்க.....

உடைய கூடாதுனு வைரியாக்கியமா இருந்த கண்ணீரு உடஞ்சி ஓட 13 வேகமா வகுப்ப விட்டு ஓட ஆரம்பிச்சான்.

“டேய் 13 இந்தாடா நில்லுடா, டேய், டேய்.....”ங்கர வாத்தியாரோட குரல் தொலைஞ்சி போற தூரத்துக்கு 13 ஓடிட்டு இருந்தான்.

கண்ணு தண்ணியும் நிக்கல அவன் ஓடுனதும் நிக்கல வைரவன் ஓடை கரைல அவன் ஓட்டம் மட்டும் நின்னுது கண்ணீர ஆறா ஓடிக்கிட்டு இருந்தது.

13க்கு வாத்தியாரு மேல இருந்த கோவத்தோட அவன் அப்பா மேல தான் கோவ கோவமா வந்தது. ஊரு உலக்கத்துல இப்படி யாராவது பேர் வைப்பாங்களா 13னு?.

13 வீட்ல அவங்க அப்பா சின்ன வயசுல கூப்பிடறப்ப விவரம் புரியாம அப்பா அப்பானு சிரிச்சிக்கிட்டே அப்பாக்கிட்ட ஓடுவான். 13 அம்மா மட்டும் அவன 13னு என்னைக்கு கூப்பிடவே மாட்டா அப்பு அப்புனு கூப்பிடுவாளே தவிர 13னு வாய்தவறி கூட வந்திராது, 13 அப்பாரோட அப்பா மட்டும் தான் அவங்க கூட இருக்கிரது, 13 பொறக்குரதுக்கு முன்னாடியே 13 அப்பாரோட அம்மா ஏதோ சீக்கு வந்து வைத்தியம் சரியா பாக்காம ஒரு குளிர்மாச வெள்ளி கிழமைல தூங்கனுது தூங்கனபடியே போய் சேந்துட்டாங்க.

13 பொறக்குரதுக்கு முன்னாடியே அவன் அப்பா முடிவு பண்ணிட்டாப்புல என் கொழந்தைக்கு 13 நவம்பர்னு தான் பேர் வைக்கனம்னு ஊர்ல எல்லாரும் ஆம்புள புள்ள பொறந்த என்ன பேரு, பொம்பள புள்ள பொறந்தா என்ன பேருனு கேக்க அதெல்லாம் பொறந்த பின்னாடி பாத்துக்கிளாமுனு சொல்லிட்டு 13 நவம்பர்கறத மூச்சிவிடாம இருந்தார்.

2 அக்டோபர் 86 சரியா காலை 10 மணிக்கு நல்லா வெயில் அடிக்கிர நேரத்துல குவாகுவானு வைத்தியச்சி பிரசவம் பாக்க பிறந்தான். தலபிரசவமா பிறந்ததால 13க்கு ஏகப்பட்ட கவனிப்பு மாப்பந்தல் கிராமத்துல பாதி பேரு 13 குடும்பத்துக்கு சொந்தமானதால தாய் ஊட்டத்துக்கு கம்பு, கேழ்வரகுல பதார்த்தமும், டவுன்ல இருந்து வந்தவங்க ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சும் சேய்க்கு புது துணியும்னு உபசாரம் பலமா இருந்தது.

என்ன பேரு வைக்கிறதுனு வீட்ல பேச்சு வந்தப்ப 13ஓட தாத்தாரு குலதெய்வ பேரான கருப்பைய்யானு வைக்கிணமுனு சொல்ல, 13 அம்மா அவங்க தாத்தா பேரான வெள்ளசாமிய தான் வைக்கணும்னு சொல்ல அது வரைக்கும் சும்மா இருந்த 13 அப்பா என் புள்ளைக்கு நான் தான் பேர வைப்பேன்னு தீர்மானாமா சொல்லிட்டாரு, சரி புள்ளைக்கு அப்பன், அவன விடவா மத்தவங்களுக்கு உரிமை அவன் மனசு போல வைக்கிட்டமுனு எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

பேர யாருக்கிட்டயும் சொல்லாம 13 காதுல “13 நவம்பர், 13 நவம்பர், 13 நவம்பர்”னு 3 முறை சொல்ல அப்படி என்ன தான் சந்தோசமோ 13 நவம்பருக்கு பொக்க வாயால அம்புட்டு சிரிப்பு சிரிச்சான்.
“ஏண்டா கொழந்தவேலு அப்படி என்ன பேரதாண்டா வச்ச பய இவ்வளவு சந்தோசமா சிரிக்கிறான்” 13 தாத்தா.

கொஞ்சம் தயங்கின 13 அப்பா தொண்டைய சொருமிட்டு ”13 நவம்பர்”.

“ஏண்டா பேர சொல்லுடானா என்னடா ஏதோ தேதிய சொல்லிக்கிட்டு பேர சொல்லுடா” 13 தாத்தா.

“அதாம்பா என் மகன் பேரு 13 நவம்பர்” 13 அப்பா.

பேரன் சிரிக்கிறானு சந்தோசம இருந்த தாத்தாரோட முகம் ராத்திரி நேரத்து சூரியகாந்தி பூவா சாஞ்சி போச்சி சுதாரிச்சிக்கிட்டு “ஏண்டா மவனே உனக்கு புத்தி எதுவும் கொழம்பி போச்சா ஊருல பேருக்காடா பஞ்சம்! கந்தன், குமரன், முருகன்னு எத்தண சாமி பேரு இருக்குது, இல்ல இப்ப புதுசா வக்கிறங்களே வினோது, சுரேஸுனு இப்படி எதாவது வைடானா என்னடா இது கிறுக்குத்தனமான பேரா இருக்கு?”

“இங்க பாருங்க நீங்க வானத்தப் பாத்துகிட்டு ஆராய்ச்சி பண்றேன், ஆராய்ச்சி பண்றேன்னு பாதி ராத்திரி வீட்ல இல்லாம காட்டுமேட்ல இருந்தீங்களே அதப்பத்தி ஒரு வார்த்த சொல்லி இருப்பேனா? இல்ல ஊரு போஸ்ட் மாஸ்டர்னு உங்கள வர சம்பளத்த நீங்க வீட்டுக்கு செலவு பண்ணாம  ஏதோ ஏதோ நீட்டு நீட்டா கொழாயும், வீடு பூரா பேப்பரும் வாங்குனிங்களே அப்பவும் நம்ப 2 ஏக்கர் நிலத்துல வர குத்தகை பணம் போதும்னு உங்கள ஒரு வார்த்தைக் கூட நான் கேக்கல ஆனா இப்ப நம்ப புள்ளைக்கு இப்படி ஒரு பேர நீங்க வைக்கிறது என்னால ஏத்துக்க முடியாது”னு 13 அம்மா பொரிஞ்சி தள்ளிட்டாங்க.

“என் புள்ளைக்கு இந்த பேரு தான், யாரு என்ன சொன்னாலும், ஊரு உலகமே பழிச்சாலும் என் மவன் இந்த பேரோடுது தான் வாழ்வான்” 13 அப்பா.

இதுக்கு மேல என்ன சொன்னாலும் கொழந்தவேலு கேக்க மாட்டான் தான் புடிச்ச முசலுக்கு மூணு கால் தான்னு ஒத்த கால்ல தான் நிப்பான்னு மூக்கையனும், வள்ளியும் அமைதியாயிட்டாங்க.

அடுத்த மூணு மாசத்துல நாளொரு மேனியா 13 வளர்ந்துக்கிட்டு இருந்தான். பிறப்பு சான்றிதழ் வாங்கணும்னு யாருக்கிட்டயும் சொல்லாம மாப்பந்தல் இருந்து 5 கிமீ இருக்க நல்லூர்க்கு சைக்கிள மெதிச்சிட்டு போன கொழந்தவேலு தாலுக் ஆபிஸ்க்கு போய் தன் மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கணும்னு சொல்ல ”சரி உன் பையன் பேரென்ன? பொறந்த தேதி என்ன”னு ஆபிசர் கேக்க.

“13 நவம்பர்” கொழந்தவேலு.

“எந்த வருசம்” ஆபிசர்.

“வருசம்லா இல்லீங்க 13 நவம்பர் மட்டும் தான்” கொழந்தவேலு.

“என்னப்பா விளையாடுறியா எந்த வருசம் பொறந்தான்னு தெரியாம எப்படிப்பா சர்டிபிகேட் கொடுக்கறது?” ஆபிசர்.

“அய்யா அவன் பொறந்தது 2 அக்டோபர் 1986” கொழந்தவேலு

“அப்ப 13 நவம்பர்னு சொன்னியே அது என்னாது?” ஆபிசர்.

“அது அவன் பேரு”ங்கனு கொழந்தவேலு சொன்னதும் அதிர்ச்சியான ஆபிசர் “ஏய் ஏன்பா தெரிஞ்சி தான் பேசுறியா, எதுவும் குடிச்சிட்டு வந்திருக்கியா?”.

“அது தாங்கயா என் மவனுக்கு நான் வச்ச பேரு அதே பேருல எனக்கு சர்டிபிகேட் தாங்க” கொழந்தவேலு.

“இப்படிப்பட்ட பேருக்குளா சர்டிபிகேட் தரமுடியாதுபா, என்னயா பேரு இது 13 நவம்பர்னு?, வேற பேர சொல்லு” ஆபிசர்.

“இது தாங்க என் மவன் பேரு, என்ன என்னவோ வெளிநாட்டு பேரலா வைக்கிறாங்க என் மவனுக்கு நான் ஆசப்பட்ட பேர தான் வைக்கினும் எனக்கு சர்டிபிகேட் தாங்க” கொழந்தவேலு.

அந்த ஆபிசர் பக்கத்துல உட்காந்திருந்த இன்னொருத்தர்க்கிட்ட “என்னங்க பண்றது இந்த மாதிரி பேர் வைக்க நம்ப ரூல்ஸ்ல இடம் இருக்கா, நாளைக்கு நம்ப பேர்ல எதுவும் ரிப்பேர் வரப்போகுது”னு சொல்ல. பக்கத்தில இருந்தவர் “நாம என்னங்க பண்ண முடியும் அவன் புள்ளைக்கு அவன் பேரு வைக்கிறான், எழுதி விடுங்க ஒண்ணும் பிரச்சனை வராது”.

இந்த மாதிரிலா யாராவது வந்து நிப்பாங்கனு கொஞ்சம் கூட எதிப்பாக்காத ஆபிசர் தலைய அப்படி இப்படியும் ஆட்டிக்கிட்டு கொஞ்சமும் விருப்பம் இல்லாம “13 நவம்பர்”னு பச்ச் மைல சர்டிபிகேட்ல எழுதிக் கொடுத்தார். அத கைல கொடுத்திட்டு “இந்தாப்பா இன்னாரு தான் சர்டிபிகேட் கொடுத்தார்னு ஊருக்குள்ள யாருக்கிட்டயும் சொல்லகூடாது சொல்லிட்டேன்”ங்கறது கொஞ்சம் கூட காதுல வாங்காம ஏதோ பெரிய பொக்கிக்ஷம் கிடச்ச மாதிரி அத ஊருக்கு போற வரைக்கு பாக்கெட்ல இருந்து எடுத்து எடுத்து பாத்துக்கிட்டு போனான் கொழந்தவேலு.

அத கொண்டு போய் அவன் அப்பாக்கிட்டயும், மனைவிகிட்டயும் காட்ட பேரே தெரியாத அந்த ஆபிசர் சர்டிபிகேட் கொடுத்ததுக்காக அவங்க வசவுக்கு இலக்கா போனார்.

என் புள்ள பேரு 13 நவம்பர், 13 நவம்பர்னு ஊருக்குள்ள சொல்ல அது வரைக்கும் கொழந்தவேலு ராத்திரி ஆராய்ச்சி பண்ண போறேனு காட்டுக்குள்ள போய் படுத்துகிடந்தப்பவே போஸ்ட்மாஸ்டர்கு எதுவும் கோளாறானு அரசல்புரசலா பேசிக்கிட்டு இருந்த ஊரு இப்ப மெய்யாலுமே போஸ்ட்மாஸ்டருக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்குனு கொழந்தவேலு காது படவே சொல்ல ஆரம்பிட்டிச்சி.

அதப்பத்திலா கவலப்படாத கொழந்தவேலு 13அ நல்லா வளக்குரதலயும், காகிதத்துல புள்ளி வச்சி கோடுப் போட்டு அதுக்கு கீழ ஒண்ணும் புரியாத பாசைல ஏதேதோ எழுதி தனக்குதானே பேசிக்கிட்டு வாழ்ந்தான்.

வயசு ஆக ஆக 13க்கு தன் பேருல ஏதோ வித்தியாசம்னு உணர ஆரம்பிச்சான்.

“ஏன்பா 13 நவம்பர்னா தேதி தானேப்பா அத ஏன்பா எனக்கு பேரா வச்ச?”னு 13 3வது படிக்கிறப்ப கேக்க, “நல்லா கேளுடா அப்பு நாங்க கேட்டு தான் ஒண்ணும் சொல்லல இப்ப நீ கேக்கரதுக்கு பதில் சொல்லி தானே ஆகணும்”னு வள்ளி ஆதங்கத்துல சொல்ல.

“கண்ணு 13 அப்பா உனக்கு அந்த பேர வச்சிருக்கேன்னா ஏதோ காரணமா தான்ல, நானே ஒரு நாள் அது ஏன்னு உனக்கு சொல்லுவேன் அது வரைக்கும் என்க்கிட்ட நீ திரும்ப கேக்க கூடாது”னு சொல்ல, “சரிப்பா எனக்கு அப்புறமா சொல்லு”னு 13 விளையாட ஓடிட்டான்.

வகுப்பு மாற மாற புதுசா வர பசங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எப்பவும் கேலிப்பொருளா மாறிட்டான் 13, ஆனா அத பத்தி கவலப்படாம அவன் அப்பா ஏதோ பெரிய காரணத்துக்கு தான் இந்த பேர வச்சிருக்கார்னு நினச்சிட்டு இருந்த 13க்கு இன்னைக்கு கணக்கு வாத்தியார் பண்ண கேலி இத்தண நாளா நம்பிக்கிட்டு இருந்தது பொய்னு தோணிடிச்சி, அவங்க அப்பா அவன்கிட்ட வாணத்த பாத்து ஏதோ சொன்னது அவனுக்கு புரியலனாலும் அப்பாரு பெரிய புத்திசாலினு அவன் மனசுல இருந்த பிம்பத்துல கணக்கு வாத்தியார் கல்விட்டெரிஞ்சது மனசுல வடுவா மாறி போச்சி.

கண்ணு தண்ணி வத்துற வரைக்கு அழுது தீர்த்த 13 விறுவிறுனு நேரா வீட்டுக்கு போனான், “நீ பைத்தியமாப்பா ஊருல எல்லாரும் சொல்றாங்க, 13 நவம்பர்னு உனக்கு பேரு வச்சிருக்கான் பாரு உன் அப்பன் அவன் பைத்தியம் தானேனு சொல்றாங்க”னு 13 கதறிக்கிட்டு சொல்ல.

ஆற்றாமையோட “ஏன் கண்ணு நீயா என்ன பாத்து இப்படி கேக்குற? உனக்கு இந்த பேர வச்சப்ப எல்லாரும் என்ன பாத்து என்ன என்னவோ சொன்னாங்க அப்பலா கூட எனக்கு ஒண்ணும் தோணலயா ஆனா இப்ப நீயே அப்பாவா பாத்து இப்படி கேட்டுட்ட பாரு”னு விம்மிக்கிட்டே சொன்ன கொழந்தவேலு தொண்டைய சொருமிக்கிட்டு “நல்லா கேட்டுகியா இன்னும் 11 வருசம் கழிச்சி அதாவது 13 நவம்பர் 2012ல ஒரு சந்திர கிரகணும் வரும் அப்ப இந்த உலகத்தோட தலையெழுத்தே மாற போகுது, அப்படி உலக தலையெழுத்தையே மாத்த போகுது கண்ணு உன் பேரு”னு ஏதோ மந்திரத்துல கட்டுண்டது போல கொழந்தவேலு சொல்ல.

“அடப்போப்பா உனக்கு என்ன ஆச்சி?, எல்லாரும் சொல்ரது உண்மை தான்”னு அடக்கமுடியாத அழுகையோட கொழந்த வேலோட முகத்த பாக்காம வெளிய போய்ட்டான்.

இத்தண நாளா கலங்காம இருந்த கொழந்தவேலு கண்ணீர் விட்டத பாக்க பிடிக்காத உலகம் 13 நவம்பர் 2012க்காக வேகமா சுழல ஆரம்பிச்சுது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அம்மா அப்பா கொரியாஇந்தியா பாகிஸ்தான், இஸ்ரேல் பாலஸ்தீன், அமெரிக்கா கியூபா இப்படி எப்ப வேணா முட்டிக்க ரெடியா இருக்கிற நாடுகள் லிஸ்ட்ல வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் எப்பவும் இடம் உண்டு. இரண்டு நாட்டுக்கும் ஒரே மொழி கலாச்சாரம் இப்படி எல்லாமும் ஒண்ணா இருந்தாலும் பகை மட்டும் தீர்ந்தப்பாடில்ல, கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு நம்ப முடியாத ஒற்றுமை இரண்டு மொழியிலையும் தாய் தந்தைய “அம்மா, அப்பா” னு அழுத்தம்த் திருத்தோட சொல்ரது தான். "அம்மாவ இஅம்மா”னு கொஞ்சம் இழுத்து சொல்வாங்க. வடகொரியால சர்வாதிகார கம்யூனிஸ்ட் ராணுவ ஆட்சி நடக்கரதால வடகொரியாவ பத்தி வெளி உலகுத்துக்கு ரொம்ப கொஞ்சமான விசயம் தான் தெரியும், தென்கொரியா எஞ்சாய் த லைஃப் மாமே டைப் உலகத்தில இருக்க சிறந்த பொறியியல் நிறுவனங்கள், சிறந்த மென்ப்பொருட்கள், வாகனங்கள்னு உலக சந்தைய வெகு சீக்கிரமா பிடிக்கிற நாடா இருக்கு. கொரியர்கள் சாப்பிடற கண்றாவியான உணவ மட்டும் கட் பண்ணிட்டு பாத்தா இந்திய கலாச்சாரத்துக்கும் கொரிய கலாச்சாரத்துக்கும் நிறைய நிறைய ஒற்றுமை உண்டு.

இவ்வளவு நீட்ட முழக்கமா எதுக்கும் தென்கொரியாவ பத்தி சொல்லணும் தெரிஞ்சிகணும்? சினிமா! ஆமா தென்கொரிய படங்கள நீங்க பாக்கறது இல்லனா சினிமாங்கற கலை தர ஒரு உன்னத அனுபவத்த நீங்க இழக்குறீங்கனு அர்த்தம். தென்கொரிய இரண்டு விதமான படங்கள தான் எடுக்குது மென்சோக காதல், இல்ல ரத்தம்த்தோய்ந்த சம்பவங்கள அனாயசமா படம் பண்றது. காதல் படங்கள்ல ஒரு அழகான கதாநாயகி (நிச்சயமா கவர்ச்சியான ரொம்ப அழகான பெண்கள் கிடையாது) கள்ளமில்லாத சிரித்த முகத்தோட எப்பவும் இருக்க கதாநாயகி, அவளுக்கு எதாவது ஒரு தீர்க்க முடியாத நோய், நீளமான முடியோட, உயரமா கண்களால மட்டும் நிறைய பேசுற கதாநாயகன் இவ்வளவு தான் மேட்டர் இத வச்சிக்கிட்டு தென்கொரிய படங்கள் காட்டுற மேஜிக் பாத்தா தான் தெரியும். கீழ எனக்கு பிடிச்ச சில கொரிய படங்கள என் ரசனக்கேற்ப்ப வரிசை படுத்துறேன், காண பரிந்துரை செய்றேன்.....

1) தி கிளாசிக் (the classic)
ஒரு படம் பாத்துட்டு இந்த மாதிரி இன்னொரு படம் பாக்க முடியாதானு யோசிக்க வைக்கிற படம். கதை ஒரு பெண் தன்னோட அறைய சுத்தம் செய்றப்ப தன் அம்மாவோட பழைய பெட்டிய ஆராய நேரிடுது அதுல இருக்க கடிதங்கள், டைரி வழியே தன் அம்மாவோட இறந்தகால காதல் வாழ்க்கைல பயணிக்கிற கூடவே நாமும். எங்க இருந்து தான் இப்படி மென்மையா வசனம் எழுதுறாங்கனு படம் நெடுக யோசிட்டே இருந்தேன். நிகழ்க்காலத்துல இந்த பெண்ணும் ஒரு பையன விரும்புறா, இறந்த காலத்துல அவ அம்மா ஒரு சின்ன ஊருக்கு போறா அங்க ஒரு பையன சந்திக்கிறா ரெண்டு பேரும் விரும்புறாங்க கடித பரிமாற்றம் செஞ்சிக்கிறாங்க, ஆனா அவ அம்மா ஏற்கனவே வேற ஒரு பையன் கூட நிச்சயம் பண்ணி இருக்காங்க, நிச்சயம் செய்யப்பட்ட பையனும் அவ அம்மா விரும்புற பையனும் ராணுவ பள்ளில உயிர்த்தோழர்கள் அவ அம்மா கடைசியா யார கல்யாணம் செஞ்சிக்கிட்டா இப்ப நிகழ்க்காலத்துல இவ காதலிக்கிற பையன் யாரு இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தாங்களா அப்படிங்கறத தான் முடிவு. படம் பேருக்கேத்த மாதிரியே ஒவ்வொரு காட்சியும் கிளாஸ் பிண்ணனி ரசனையோட காட்சிமாற்றம், இசை, வசனம்னு படம் பாக்குறத சிறந்த அனுபவமாக்கிற ஒரு திரைப்படம், பாத்துட்டு சொல்லுங்க.

2) எ மொமண்ட் டு ரிமெம்பர் (a moment to remember)


உங்க கண்ணீர எப்படியும் வெளில கொண்டு வரேன்னு முடிவோட படம் பண்ணி இருப்பார் போல இயக்குனர். ஒரு சோககாதல் படம். காதலிச்சவன் கூட ஊர விட்டு ஓடிப் போகலாம்னு ரயில்வே ஸ்டேசன் வந்து அங்க காதலன் வராம கைவிடப்பட்ட நாயகி பின்ன மனசு மாறி வீட்டுக்கு போறா அதுக்கு நடுவுல நாயகன் எண்ட்ரி, பின்ன எதேச்சையாவும், வேணுமுனேவும் ரெண்டு பேரும் சந்திக்க காதல் எண்ட்ரி, எப்படியோ இரண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி திருமணம் நடக்குற வரைக்கும் சுமுகமா போய்ட்டு இருக்க கதை, கல்யாணத்துக்கு அப்புறம் வேறயா ஆகுது. வயசானவங்களுக்கு வர அல்மெய்சர் நோய் இந்த இளவயசுலயே நாயகிக்கு. நாளாக நாளாக தற்சமயம் நடக்குர சம்பங்கள ஆட்கள மறக்க ஆரம்பிக்கிறா. நாயகியோட அப்பா அம்மா நாயகன் கிட்ட உன்னால அவள பாத்துக்கு முடியாது எங்ககூட அனுப்பிடு சொல்றத கேக்காம கூடவே வச்சிக்கிறான், ஒரு கட்டத்துல நாயகனோட பேரே நாயகிக்கி மறந்து போய் அவன தன்னோட பழைய காதலன் பேரிட்டு கூப்பிடும் போது, அடகொன்னியால படத்த அழுதிட்டு தான் பாக்கணும்ப்போலனு ஆகிடுது, நாயகன் குறைந்தப்பட்சம் அவள அவங்க ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்ட முதன் தருணத்தையாவது அவள உணர வைக்கிணும்னு போராடுறது அப்புறம் அது என்ன ஆச்சிங்கறது தான் முடிவு. இந்த படத்த கதைக்காக மட்டும் பாக்க பரிந்துரை செய்யல படத்தோட காட்சிமைப்புகள், உணர்வுகள இயல்பா உணர்த்துரதுங்கற அம்சங்கள் நிறைய.

3) மை சாசி கேர்ள் (my sassy girl)


இதுவும் ஒரு காதல் படம் தான், படத்தோட கரு சோகம் தான் ஆனா படம் நெடுக நகைச்சுவை தான். குடிச்சிட்டு ரயில்வே ஸ்டேசன்ல தள்ளாடுற நாயகிய காப்பாத்த போய் வம்புல மாட்டிக்கிற நாயகன். அப்புறம் அவளையே விரும்ப ஆரம்பிக்க அதுக்கு அந்த நாயகி இவன சம்பந்தம் சம்பந்திமில்லாதத பண்ண சொல்ரா இவனுக்கா அவ பிடிச்சி சொல்ராளா இல்ல சும்மா அலைக்கழிக்கிறாளானு தெரியல, இதுக்கு நடுவும் அவன் அத்தை வேற இவன தன் இறந்துப்போன பையன் மாதிரியே இருக்கான்னு இவன ஒரு பொண்ணு கூட சந்திச்சி அவள கல்யாணம் பண்ணிக்கிக்க சொல்றா. ஆனா இவன் நாயகி பின்னாடியே சுத்துறான். ஒரு கட்டத்துல இரண்டு பேரும் கொஞ்சம் நாள் பிரிஞ்சிருந்து அதுக்கப்புறமும் காதல் இருந்தா ஒண்ணு சேர பாக்களாம்னு முடிவு பண்ணி ஒரு மலையுச்சில இருக்க ஒரு ஒற்றை மரத்துக்கு கீழ ஒரு கடிக்காரத்த புதச்சி வைக்கிறாங்க 2 வருசம் கழிச்சி அதே நாள் அதே நேரத்துல திரும்ப சந்திச்சிக்கணும்ங்கற ஒப்பந்தத்தோட. அந்த 2 வருசத்தல அவங்க காதல் என்னாச்சி, அந்த மரம் என்ன ஆச்சி, அவன் அத்தை சொன்ன பொண்ணு என்ன ஆனாங்கறது தான் முடிவு.

நான் எந்த படத்தையும் எந்த வருசம் வெளியிடப்பட்டது, இயக்குனர் யாரு, நடிகர்கள் யாருனு சொல்ல விரும்பல, படம் தர அந்த நல்ல அனுபவத்த நீங்களும் அனுபவக்கிணும்கிற எண்ணதுல இத பகிர்ந்துக்கிட்டேன் மீதி படங்கள அடுத்த பதிவுல பகிர்ந்துக்கிறேன்.........